வியாழன், ஆகஸ்ட் 30, 2012

உங்கள் பணத்தை சில நொடிகளில் இரட்டிப்பாக்குவது எப்படி? - How to Double your Money in Few Seconds?

இந்த பதிவை மிகக் கவனமாக படியுங்கள். உங்கள் செல்வத்தை அதிகரிப்பதற்கு இது மிக முக்கியமான தந்திரம். நீங்கள் கூட சில நேரங்களில் பயன்படுத்தியிருக்கலாம். சிலருக்கு இயற்கையாகவே இந்த திறமை இருக்கலாம். இந்த தந்திரத்தை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

கையில் இருக்கும் பணத்தை இரண்டு மடங்காக்குவதற்கு அந்தப் பணத்தை அப்படியே இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம். இதை எப்பொழுது செய்ய வேண்டுமென்றால், எப்பொழுதெல்லாம் உங்களுக்கு பெரிதளவில் பயன்தராத பொருளை வாங்க முற்படுகிறீர்களோ அப்பொழுதுதான் இந்த தந்திரத்தை செயல்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் இது வேலை செய்யாது.

ஆனால் இதில் எப்படி பணம் இரண்டு மடங்காகிறது? அதே பணம் அப்படியேத் தானே இருக்கிறது? யோசித்துப் பாருங்கள். உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஏதோ ஒரு நேரத்தில் ஒரு வர்த்தகர் திறமையாகப் பேசி அதிகம் உபயோகமில்லாத ஒரு பொருளை உங்களிடம் விற்க முயல்கிறார். ஆனால் நீங்களோ இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி அந்த பொருளை வாங்காமல் 100 ரூபாயை அப்படியே மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டீர்கள். ஒரு வேளை அதை செலவு செய்திருந்தால் உங்கள் பையில் பணம் எதுவும் இருக்காது. கையில் உபயோகமில்லாத ஒரு பொருள் வேண்டுமானால் இருக்கும். உபயோகமில்லாத பொருளுக்கு மதிப்பில்லையல்லவா? என்னங்க கவுன்டமணி செந்தில் நகைச்சுவை மாதிரி, இதுதான்னே அந்த 100 ரூபாய் என்பது போல் இருக்கிறதா? இந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒரு கருத்து இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்...

A penny saved is a penny earned. ஒரு பைசா சேமித்தது ஒரு பைசா சம்பாதித்ததற்கு சமம். - Benjamin Franklin பென்ஞ்சமின் ஃப்ரன்க்ளின்

உங்கள் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கவனமாக பாருங்கள். நீங்கள் ஆசையாக வாங்கிய எத்தனை பொருட்கள் பல நாட்களாக / மாதங்களாக / வருடங்களாக பயன்படுத்தாமல் தூசி அடைந்து கிடக்கின்றன? அப்படி ஒன்றிரண்டு பொருட்களிருந்தாலும் நீங்கள் இந்த தந்திரத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த தந்திரத்தை மிகவும் கடினமான அனுபவங்களின் மூலமாகத் தான் கற்றுக்கொண்டேன். படித்து முடித்து வேலைக்குச் சென்று சம்பளம் வாங்க ஆரம்பித்ததும் ஒரு புது சுதந்திரம் கிடைத்தது. நாம் விருப்பப்படும் பொருட்களை நாம் விருப்பப்படும் நேரத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் அந்த சுதந்திரம். வீட்டில் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய பல பொருட்களை வாங்கியிருந்தாலும் அவற்றில் சில தேவையில்லாத செலவுகள்தான். மொத்தமே 10 முறை கூட பயன்படுத்தாத எம்.பி.3 பிளேயர், மாதம் ஒரு முறை செய்யும் சமையலுக்காக வாங்கிய சமையல் சாமான்கள் போன்றவை இந்த தேவையில்லாத செலவுகளில் சில. பெரும்பாலும் கணினியிலேயே பாடல்களைக் கேட்பதால் எம்.பி.3 பிளேயரை பயன்படுத்துவதேயில்லை. திருமணத்திற்கு பிறகு சமையல் சாமான்கள் பயன்பட்டாலும், அதற்கு முன்பு ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை தான் பயன்படுத்துவேன். சமையலில் உள்ள ஆர்வத்தில் வாங்கிவிட்டேன். பயன்படுத்திய விதத்தை வைத்துப் பார்க்கும்பொழுது அதுவும் வீண் செலவே.

கடன் அட்டையைப் பயன்படுத்தும் நேரங்களில் இந்த தந்திரத்தை வேறு மாதிரியில் பயன்படுத்த வேண்டும். எதாவது பெரிதளவில் தேவையில்லாத பொருளை கடன் அட்டையின் மூலம் வாங்க முற்படும் போது, கடன் அட்டையை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், கடன் அட்டையை இரண்டாக மடித்த பின் அதை எப்பொழுதுமே பயன்படுத்த முடியாது. அதனால் உங்களிடம் எத்தனை கடன் அட்டைகள் உள்ளதோ அத்தனை முறைதான் இந்த தந்திரத்தை பயன்படுத்த முடியும்.

ஆனால் ஒரு பொருளை பெரும்பாலும் பயன்படுத்தமாட்டோம் என்று அதை வாங்குவதற்கு முன்பே எப்படித் தெரியும்? மிகவும் சரியான கேள்வி. கடைத் தெரு வழியாக செல்லும்போது நமக்கு பிடித்தமான பொருளைப் பார்த்து கையில் காசு இருந்தால் உடனடியாக அதை வாங்க வேண்டுமென்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கும். அதனால் எந்த பொருள் வாங்குவதற்கு முன்பும் "இதை 7 நாட்கள் கழித்து வாங்கிக்கொள்ளலாமா?" என்ற கேள்வியைக் கேளுங்கள். 1 ரூபாயானாலும் 1 லட்சம் ரூபாயானாலும் எந்த ஒரு பொருளுக்கும் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பற்பசை சோப் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் 1 நாள் கூட காத்திருக்க முடியாதென்பதால் அவற்றை வாங்கிக் கொள்வீர்கள். செல் போன் தொலைக்காட்சி போன்றவை 7 நாட்கள் காத்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து மிக அரிதாகப் பயன்படுத்தக் கூடிய பொருட்களை மறந்துவிட்டிருப்பீர்கள். ஒரு வாரம் கழிந்த பின்பும் அந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று தோன்றினால் "இன்னும் 7 நாட்கள் கழித்து வாங்கிக்கொள்ளலாமா?" என்ற கேள்வியைக் கேளுங்கள். இப்படியே 3 வாரம் தள்ளிப் போடுங்கள். அதற்கு பின்பும் வாங்க வேண்டுமென்று தோன்றினால் வாங்கிக்கொள்ளுங்கள். இந்த மூன்று வாரத்தில் தேவையில்லாத பொருட்களையெல்லாம் மறந்து விடுவீர்கள். அல்லது இதைவிட அதிக தேவையுள்ள பொருள் வாங்கி பணம் செலவாகிவிடலாம்.

If you buy things you don't need, you'll soon sell things you need. நீங்கள் உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கினால், சீக்கிரம் உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும். - Warren Buffett வாரன் பஃபட்

அதிகமாக கஞ்சத்தனம் செய்து சேர்த்து வைத்தவர்கள் எல்லோரும் பணக்காரரானதுமில்லை, அதிகமாக செலவு செய்தவர்கள் எல்லோரும் ஏழைகளானதும் இல்லை. சேமிக்கக்கூடிய பணத்தை என்ன செய்கிறோமோ அதைப் பொருத்துத்தான் செல்வந்தராகவோ ஏழையாகவோ மாறுகிறோம். சேமித்த பணத்தை என்ன செய்யவேண்டும் என்று வரும் பதிவுகளில் காண்போம்.

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ரிச் டாட் புவர் டாட் - புத்தகத்தைப் பற்றி சில வரிகளில்

ரிச் டாட் புவர் டாட் (பணக்கார அப்பா ஏழை அப்பா) என்ற புத்தகம் ராபர்ட் கியொசாகி என்பவரால் எழுதப்பட்டது. தலைப்பைப் பார்த்ததும் இந்த எழுத்தாளர் பணக்கார அப்பாவுக்கும் ஏழை அப்பாவுக்கும் உள்ள வித்தியாசங்களை கட்டம் போட்டு எழுதியிருப்பாரோ என ஊகித்திருந்தீர்களானால், நீங்கள் நினைத்தது சரியே. ஆனால் கட்டம் போடுவதற்கு பதிலாக கதை வடிவத்தில் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை எளிமையான ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல. புத்தகங்கள் எழத ஆரம்பிக்கும் முன் கப்பல் மாலுமியாக, அமேரிக்க ராணுவத்தில் பைலட்டாக, செராக்ஸ் நிறுவனத்தில் வர்த்தகராக என பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.

பணக்காரர்கள் என்றாலே பலருக்குப் பிடிக்காது. பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டிதான் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்று நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் பணத்தைப் பற்றி நன்கு புரிந்தவர்கள் பணக்காரர் ஆகிறார்கள். மற்றவர் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கமாகவும் இருக்கிறார்கள். உலகிலுள்ள அனைத்து பணத்தையும் எடுத்து எல்லா மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்தாலும் சில வருடங்களில் மீண்டும் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு வந்துவிடும்.

இதற்கு காரணம் அதிகப்படியான மக்கள் பணத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாததுதான். உயர்கல்வி பயின்றவர்கள் கூட இதிலடங்குவர். பள்ளியிலிருந்தே பணத்தைப் பற்றி கற்பிக்க வேண்டுமென்கிறார் இந்நூலாசிரியர். சீன நாட்டு மக்களிடம் ஒரு பழமொழி உண்டு. அது என்னவென்றால், "ஒருவன் பசியோடிருந்தால் அவனுக்கு மீனைக் கொடுக்காதே. மீன் பிடிப்பது எப்படியென்று கற்றுக் கொடு". ஒருவருக்கு பணம் கொடுப்பதை விட பணம் சம்பாதிப்பது எப்படியென்று சொல்லிக் கொடுப்பது மேன்மையான செயல். இதைத்தான் கியொசாகி இந்த புத்தகத்தின் மூலம் செய்ய முயல்கிறார்.

இந்த புத்தகத்தில் இவரது கருத்துக்களை 6 பாடங்களாக தொகுத்திருக்கிறார். பாடங்கள் என்றதும் பயந்துவிடாதீர்கள். அனைத்து கருத்துக்களையும் தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்து கதை வடிவத்தில் கொடுத்துள்ளார். இந்த பாடங்களின் தலைப்புகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

பாடம் 1 - The Rich Don't Work For Money (பணக்காரர்கள் பணத்துக்காக வேலை செய்வதில்லை)
பாடம் 2 - Why Teach Financial Literacy? (பணம் பற்றிய விழிப்புணர்வு ஏன் தேவை?)
பாடம் 3 - Mind Your Own Business (உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்)
பாடம் 4 - The History of Taxes and The Power of Corporations (வரியின் வரலாறும் கம்பெனியின் வலிமையும்)
பாடம் 5 - The Rich Invent Money (பணக்காரர்கள் பணத்தை கண்டுபிடிக்கிறார்கள்)
பாடம் 6 - Work to Learn Don't Work for Money (கற்றுக்கொள்வதற்காக வேலை செய்யுங்கள் பணத்திற்காக வேலை செய்யாதீர்கள்)

இந்த புத்தகத்தை இரண்டாம் முறையாக படித்து முடித்த பின் இந்த பதிவை எழுதுகிறேன். உங்கள் புத்தக அலமாரியில் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம். புத்தகத்திற்கென்று அலமாரியில்லையென்றால் முதலில் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஞாயிறு, மார்ச் 25, 2012

தமிழரின் பழங்கால எழுத்து

கூப்பிடும் தூரத்திலுள்ளவர்களிடம் கருத்துப்பரிமாற்றம் செய்ய மொழி தேவை. நிலம், வெளி மற்றும் காலத்தினால் தொலைவுபடுத்தப்பட்டவர்களின் கருத்துப்பரிமாற்றத்திற்கு எழுத்து தேவை. எழுத்துக்கள் கூறும் வரலாறு மனிதர்களைப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் மொழியைப் பற்றி உண்மையை மட்டும்தான் கூறமுடியும்.

இந்த எழுத்தைப் பதிவுசெய்வதற்கு ஊடகம் தேவை. இதற்கு பழங்காலத் தமிழர்கள் ஓலைச்சுவடிகளைப் பயன்படுத்தினார்களென்று நாமரிவோம். இந்த ஓலைச்சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டன எப்படிப் பதப்படித்தப்பட்டன எப்படி எழுதுவது போன்ற சுவையானத் தகவல்களைப் பின்வரும் வீடியோ இணைப்பில் கண்டறிந்து கொள்ளுங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=p-Rnk-_SNY0#!

எனது முதல் பதிவில் நகலெடுப்பது எவ்வளவு கடினமானதென்று எழுதியிருந்தேன். அதைப்பற்றியும் மேற்கண்ட வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கும் வரலாற்றுப் பதிவுகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன. இன்று நம் எண்ணங்களுக்கு எழுத்துவடிவம் கொடுக்க கடைக்குச் சென்று இரண்டு ரூபாய்க்கு ஒரு காகிதமும் ஒரு பென்சிலும் வாங்கி எழுத ஆரம்பித்துவிடலாம். ஆனால் ஐந்தாயிரமாண்டுகளுக்கு முன்பு இவ்வளவு சுலபமா என்று தெரியவில்லை.

மொழி அத்தியாவசியமாக இருந்த அளவுக்கு எழுத்து அத்தியாவசியமில்லை. எழுதத் தெரியாமலிருந்துவிடலாம் ஆனால் மொழி தெரியாமலிருக்கவியலாது. எழுதுவதே ஆடம்பரமென்றால் இலக்கியத்தை எங்கு சேர்ப்பது? ஆனால் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சங்கங்கள் நடத்தியிருக்கிறார்களென்றால் தமிழர் நாகரீகம் மிகவும் மூதிர்ச்சியடைந்திருந்திருக்க வேண்டும்.

ம்ம்ம்.... இப்படிப் பழைய கதைகளைப் பேசினால் மட்டும் போதாது. புதிய சாதனைகள் பல படைக்க வேண்டுமென்றுதானே சிந்திக்கிறீர்கள். சரி சரி இத்தோடு முடித்துக் கொள்கிறேன் இன்றைய மொக்கையை.

சனி, அக்டோபர் 29, 2011

புகையிலும் குளிர் காயலாம்?

பொதுவாக புகையென்றாலே ஒவ்வாது எனக்கு. சாலையில் சில சமயம் கொசு மருந்து அடிப்பது போல சில ஆட்டோக்கள் முன்னால் சென்றால், சாதகமான சூழ்நிலையிருப்பின் முந்திச் சென்றுவிடுவேன்; இல்லையெனில் பிரேக் போட்டு, புகை, காற்றில் கரைந்து வலுவிழக்குமளவு பின்தங்கிச் செல்வேன். இது கனரக வாகனங்களின் பின் செல்லும்பொழுதும் பொருந்தும்.

ஆனால் வேண்டுமென்றெ ஒரு முறை, புகை போக்கியின் அருகிலேயே பைக்கை ஓட்டிச் சென்றுள்ளேன். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போலவே நல்ல மழைக் காலம். இரவு 10 மணியளவில் சென்னை மெப்ஸிலுள்ள எனது அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். புறப்படும் சமயம் சிறிது தூரலாக இருந்தது. ஏற்கனவே நேரமாகிவிட்ட நிலையில் தூரல்தானே என்று கிளம்பிவிட்டேன். அலுவலக வளாகத்தைக் கடந்து சற்று தூரம் வந்த பிறகுதான் தெரிந்தது, அது சிறிய தூரலல்ல, லேசான மழையென்று.

ஒதுங்குவதா? செல்வதா? ஒதுங்க வேண்டுமானால் அடுத்து எங்கே வழியிருக்கிறதென்று சிந்தித்து முடிப்பதற்குள், சட்டை உடலோடு ஒட்டுமளவுக்கு நனைந்திருந்தேன். முழுக்க நனைந்த பின் முக்காடெதற்கு என்பது போல, ஒதுங்கி மழை நிற்கும் வரை காத்திருக்கும் எண்ணத்தை அடியோடு அழித்துவிட்டேன். அதுவும் ஓங்கிப் பெய்து ஓயும் மழையல்ல, அடை மழை. அன்று காலையிலிருந்தே அப்படித்தான் பெய்து கொண்டிருந்தது.

மெப்ஸ் வளாகத்தைக் கடந்து, ஆறு வழிச் சாலையையடைந்து, 50 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டும் போது, குளிர்ந்த காற்றும் சொட்டச் சொட்ட நனைந்த உடையும், தாடைத் தசைகளை இயக்கி, பற்களை அந்நிச்சையாகவே தந்தியடிக்க வைத்தன. அதனால் வேகத்தைக் குறைத்து 40 கிலோமீட்டரிலேயே செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் குளிர் தாங்கக் கடினமாகத்தானிருந்தது. அந்த சமயம் தான் என் சேவகனாக வந்தது MTC பேருந்து (சென்னை மாநகரப் பேருந்து).

அப்பொழுதுதான் T.B. மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று கிளம்பிய பேருந்தை, அதன் வலப்பறமாக முந்திச் செல்ல முயற்சித்தேன். பேருந்து போன்ற கனரக வாகனங்களில் வலதுபுறம், பின் சக்கரத்திற்கு சற்று முன்புதான் புகை போக்கியிருக்கும். சரியாக அந்த இடத்தைக் கடக்கும்பொழுது, ஏதோ சுகமாக இருப்பதாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் புகையிலிருக்கும் எந்திரத்தின் வெப்பம், குளிருக்கு இதமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன்.

அதற்கு பிற்பாடு பைக்கின் வேகத்தை பண்படுத்தி, பேருந்தின் வேகத்தோடு ஒத்திருக்குமாறு புகை போக்கியின் பக்கத்திலேயே பயணம் செய்தேன். பேருந்து ஏதாவது நிறுத்தத்தில் நின்றால், சற்று முன்பாகச் சென்று, மற்றொரு பேருந்தையோ, லாரியையோ ஒட்டிக் கொண்டேன். இவ்வாறு அன்றைய பயணம் இனிதே முடிந்தது.

இன்றும் அதே முறையில் பயணம் செய்ததும், இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று நனையவில்லை. குளிர்க் காற்று மட்டும் தான்.

புதன், அக்டோபர் 26, 2011

அணு மின் சக்தி இந்தியாவுக்குத் தேவையா? Does India Need Nuclear Electric Power?

தலைப்பில் உள்ள கேள்வியைப் பார்த்த உடனேயே பலர், "இதென்ன முட்டாள்தனமான கேள்வி. அணு மின் சக்தி இன்றி நாம் என்ன செய்ய முடியும்?" என்று கேட்பார்கள். ஆனால் சிலர், "அணு சக்திக்கு மாற்று வழிகள் உள்ளன. அணு சக்தியிலுள்ள அபாயங்களுக்காக அதைப் பயன்படுத்துவதை அறவே ஒழித்திட வேண்டும்" என்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? பலர் சொல்வதைக் கேட்க வேண்டுமா? அல்லது சிலர் சொல்வதைக் கேட்க வேண்டுமா?

மக்களாட்சி பலர் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்தே வேலை செய்கிறது. அல்லது, அப்படித்தான் தோன்றுகிறது. நாம் பலரின் கருத்தைக் கேட்க வேண்டுமா? அல்லது சிலரின் கருத்தைக் கேட்க வேண்டுமா? ம்ம்ம்... சரி பதிலையும் நானே சொல்கிறேன். அந்த சிலர் யார் என்பதை வைத்துதான் இருக்கிறது.

ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் கிரிக்கெட் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள், நீங்கள் விளையாடும் மைதானத்திற்கு சச்சின் டென்டுல்கரும், தோனியும் வருகிறார்கள். நீங்கள் பந்து வீசும் முறையைப் பார்த்துவிட்டு, சில மாற்றங்கள் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், உங்கள் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து, அது சரியாக வராது என்று சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில், யார் சொல்வதைக் கேட்பீர்கள்? பல ஆண்டுகள் உயிருக்குயிராக பழகிய நண்பர்கள் சொல்வதையா? அல்லது உங்களை யாரென்றேத் தெரியாத, டென்டுல்கரும் தோனியும் சொல்வதையா? முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அப்படியானால், பல ஆண்டுகள் அணு இயற்பியல் படித்து, பல ஆண்டுகள் அணு உலை வடிவமைப்பதில் பணியாற்றிய விஞ்ஞானிகள் சொல்வதைக் கேட்பதா? அல்லது கடந்த சில நாட்களாக, இது போன்று ஒரு சில கட்டுரைகளைப் படித்த ஆயிரக்கணக்கான மக்கள் சொல்வதைக் கேட்பதா?

நிலக்கரியிலிருந்து மின் உற்பத்தி செய்வதால் உருவாகும் புகையினால், புற்றுநோய் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டேயிருக்கும் சமயத்தில், கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சு தாக்கி ஒரு வேளை இறந்துவிடுவோமோ என்று எண்ணி பலர் எதிர்க்கின்றனர். கண் முன், கொஞ்ச கொஞ்சமாகக் கொல்லும் அனல் மின் நிலையங்களை ஏற்றுக்கொள்ளும் மக்கள், எந்த நிச்சயமுமின்றி ஒரு வேளை கொன்றுவிடுமோ என அணு மின் நிலையங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் என்ன?

நிச்சயமில்லாமல் ஒன்றுமில்லையே. உலகில் பல இடங்களில் அணு உலை விபத்துக்களால் மக்கள் இறந்திருக்கிறார்களே?

பல இடங்களில் விபத்துக்கள் நடக்கின்றனவா? உலகிலுள்ள பல அணுவுலைகளில், விரல் வைத்து எண்ணும்படியாக, சிலவற்றிலேயே விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றின் கதிர் வீச்சுக் கசிவால் ஏற்பட்ட இழப்பு, ஒவ்வொரு ஆண்டும் அனல் மின் நிலையங்களில் வெளியேறும் புகையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட மிகக் குறைவே.

அட இந்த விஷயம் தெரியாமல் போனதே. அப்படியானால் அணு மின்நிலையங்களுடன் சேர்த்து அனல் மின்நிலையங்களையும் மூட வேண்டும்.

அப்படிச் செய்தோமென்றால், எற்கனவே இருக்கும் காற்றாலைகள் மற்றும் நீர் மின் நிலையங்களில் வரும் உற்பத்தியை வைத்து, மழை பெய்யும்பொழுது, காற்று வீசும்பொழுது மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் ஆயிரக்கணக்கான தொற்சாலைகள் இயங்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பாதிக்க ஆரம்பிக்கும். பல கோடி மக்கள் வேலையிழப்பார்கள். மக்களுக்கு அரசாங்கத்தின் மேலுள்ள நம்பிக்கை போய்விடும். உள்நாட்டுப் போர் உருவாகும். அண்டை நாடுகள் இதுதான் சமயமென, நிலத்தை ஆக்கிரமிக்க ஆரம்பிப்பார்கள். அப்புறம் என்னங்க, நம்ம கதி அதோ கதி தான்.

மின் உற்பத்தி ஒரு நாட்டிற்கு இவ்வளவு அவசியமா? பின்னர் ஏன் கூடன்குளம் போன்ற இடங்களில் மக்கள் அணு மின் நிலையம் வர எதிர்க்கிறார்கள்?

என்னங்க விளையாட்டா கேள்வி கேட்கறீங்க. சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுன்னு வரிசையா தேர்தலா வருகிறதல்லவா. ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி பேசிப் பேசி மக்களுக்கு அலுத்து போயிருக்கும். புதிய புதிய முறைகளில் குட்டையைக் குழப்ப வேண்டாமா?

அட அரசியலெல்லாம் நமக்கெதுக்குங்க. அரசியல்வாதிகளும் மக்களில் ஒருவர்தானே. நாம் தேர்ந்தெடுப்பவர், நம்மைப்போல தானே இருப்பார்? ஒருவேளை அரசியலைச் சாக்கடையென்று ஒதுக்கி, ஓட்டுப் போடும் கடமையைத் தட்டிக் களிக்கும் நல்லவர்களெல்லாம், ஓட்டுப் போட ஆரம்பித்தால் நிலைமை மாறலாம்.

அது எப்படியோங்க, இன்றைய சூழ்நிலையில் நமக்கு அணு மின் சக்தி தேவைதான். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், என்று சொல்வது போல். அறியாமைதான் பயத்திற்கு காரணம். மக்களின் அறியாமையில், பயத்தைப் பயிரிட்டு, பணமாக அறுவடை செய்கிறார்கள் அரசியல்வாதிகள்.

ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார் என்று தெரிந்தும் கூட, அநுதினமும் வாகனங்களில் பயணிக்கதான் செய்கிறோம். எல்லா விஷயங்களிலும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அவற்றை நிறையிட்டு, நன்மை அதிகம் தருவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிற, தீமையே இல்லாததுதான் வேண்டுமென்று இருந்தால், அது மூடத்தனம். அப்படியிருந்தோமானால் காலங்காலமாகக் காத்திருக்க வேண்டியதுதான்.

~~ எனது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், கமென்ட்ஸில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகிள்+ போன்றவற்றில், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. ~~

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்

இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும்பொழுது, "தமிழர்களுக்கு வணக்கம்" எனப் பெயரிடலாமென நினைத்தேன். ஆனால் தமிழ் மண்ணில் பிறக்காமல், தமிழ் கற்றுக்கொண்டவர்களையும் வரவேற்க வேண்டுமென்ற எண்ணத்தில், "தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்" என்று மாற்றிவிட்டேன்.

எதற்காக இந்த பிளாகை உருவாக்கினேன்? ஊருல ஒரு கம்ப்யூட்டரும், இன்டெர்நெட்டும் இருந்தா போதும், அவனவன் பிளாகெழுத ஆரம்பிச்சிடுரான். அது என்னமோ உண்மைதாங்க. சிலருக்கு திடீரென்று ஒரு கருத்து தோன்றும். மன்னிக்கவும், பலருக்கு தோன்றும். ஆனால் சிலருக்கு அதை எங்காவது எழுதாவிட்டால் தலை வெடித்துவிடுவது போலிருக்கும்.

அந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் பிரபலமான எழுத்தாளராக இல்லாதவரை, அவர்கள் எழுதிய காகிதமோ அல்லது ஓலைச் சுவடியோ காலத்தில் கரைந்துவிடும். சில நேரம் வெள்ளத்திலும் கரைந்து போவதுண்டு. முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஆவணத்தை நகலெடுப்பதென்பது, காலத்தை காட்டுமிராண்டித்தனமாக காலியாக்கும் வேலை. ஆமாங்க, நகலெடுப்பதென்றால் மற்றொறு சுவடியை எடுத்து முதலிலிருந்து எழுத வேண்டியதுதான். பணக்கார எழுத்தாளராக இருந்தால், நகலெடுக்க வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளலாம். எழுத்தாளர், பணக்காரராகவும் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

அப்படின்னா என்னதாங்க பண்ணுவாங்க ஏழை எழுத்தாளர்கள்? பெரும்பாலும் எழுதி வைத்து அவர்களே மீண்டும் மீண்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதான். சிலருக்கு மன்னரின் பரிசு கிடைக்கலாம். வடிவேலு நடித்த 23ம் புலிக்கேசி படத்தில் வருவது போல, தண்டனையும் கிடைக்கலாம்.

மனிதனின் அறிவியல் முன்னேற்றங்களால், இந்த தடங்கல்களையெல்லாம் எழுத்தாளர்கள் தாண்டிவிட்டனர். நமது நாட்டில் பத்திரிக்கைச் சுதந்திரம் இருக்கிறதோ இல்லையோ, இப்பொழுதுக்கு பிளாகிங் சுதந்திரம் இருக்கிறது. இந்த சமயத்தை, நீடித்திருக்கும் வரை பயன்படுத்திக்கொள்வோமே என்றுதான் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதனால் எனக்கு திடீர் திடீரென தோன்றும் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சில விஷயங்கள்தான் பகிரப் பகிரப் பன்மடங்காகும். அவற்றுள் கருத்துக்களும் எண்ணங்களும் அடங்கும்.

~~ எனது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், கமென்ட்ஸில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகிள்+ போன்றவற்றில், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. ~~