சனி, அக்டோபர் 29, 2011

புகையிலும் குளிர் காயலாம்?

பொதுவாக புகையென்றாலே ஒவ்வாது எனக்கு. சாலையில் சில சமயம் கொசு மருந்து அடிப்பது போல சில ஆட்டோக்கள் முன்னால் சென்றால், சாதகமான சூழ்நிலையிருப்பின் முந்திச் சென்றுவிடுவேன்; இல்லையெனில் பிரேக் போட்டு, புகை, காற்றில் கரைந்து வலுவிழக்குமளவு பின்தங்கிச் செல்வேன். இது கனரக வாகனங்களின் பின் செல்லும்பொழுதும் பொருந்தும்.

ஆனால் வேண்டுமென்றெ ஒரு முறை, புகை போக்கியின் அருகிலேயே பைக்கை ஓட்டிச் சென்றுள்ளேன். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போலவே நல்ல மழைக் காலம். இரவு 10 மணியளவில் சென்னை மெப்ஸிலுள்ள எனது அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். புறப்படும் சமயம் சிறிது தூரலாக இருந்தது. ஏற்கனவே நேரமாகிவிட்ட நிலையில் தூரல்தானே என்று கிளம்பிவிட்டேன். அலுவலக வளாகத்தைக் கடந்து சற்று தூரம் வந்த பிறகுதான் தெரிந்தது, அது சிறிய தூரலல்ல, லேசான மழையென்று.

ஒதுங்குவதா? செல்வதா? ஒதுங்க வேண்டுமானால் அடுத்து எங்கே வழியிருக்கிறதென்று சிந்தித்து முடிப்பதற்குள், சட்டை உடலோடு ஒட்டுமளவுக்கு நனைந்திருந்தேன். முழுக்க நனைந்த பின் முக்காடெதற்கு என்பது போல, ஒதுங்கி மழை நிற்கும் வரை காத்திருக்கும் எண்ணத்தை அடியோடு அழித்துவிட்டேன். அதுவும் ஓங்கிப் பெய்து ஓயும் மழையல்ல, அடை மழை. அன்று காலையிலிருந்தே அப்படித்தான் பெய்து கொண்டிருந்தது.

மெப்ஸ் வளாகத்தைக் கடந்து, ஆறு வழிச் சாலையையடைந்து, 50 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டும் போது, குளிர்ந்த காற்றும் சொட்டச் சொட்ட நனைந்த உடையும், தாடைத் தசைகளை இயக்கி, பற்களை அந்நிச்சையாகவே தந்தியடிக்க வைத்தன. அதனால் வேகத்தைக் குறைத்து 40 கிலோமீட்டரிலேயே செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் குளிர் தாங்கக் கடினமாகத்தானிருந்தது. அந்த சமயம் தான் என் சேவகனாக வந்தது MTC பேருந்து (சென்னை மாநகரப் பேருந்து).

அப்பொழுதுதான் T.B. மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று கிளம்பிய பேருந்தை, அதன் வலப்பறமாக முந்திச் செல்ல முயற்சித்தேன். பேருந்து போன்ற கனரக வாகனங்களில் வலதுபுறம், பின் சக்கரத்திற்கு சற்று முன்புதான் புகை போக்கியிருக்கும். சரியாக அந்த இடத்தைக் கடக்கும்பொழுது, ஏதோ சுகமாக இருப்பதாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் புகையிலிருக்கும் எந்திரத்தின் வெப்பம், குளிருக்கு இதமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன்.

அதற்கு பிற்பாடு பைக்கின் வேகத்தை பண்படுத்தி, பேருந்தின் வேகத்தோடு ஒத்திருக்குமாறு புகை போக்கியின் பக்கத்திலேயே பயணம் செய்தேன். பேருந்து ஏதாவது நிறுத்தத்தில் நின்றால், சற்று முன்பாகச் சென்று, மற்றொரு பேருந்தையோ, லாரியையோ ஒட்டிக் கொண்டேன். இவ்வாறு அன்றைய பயணம் இனிதே முடிந்தது.

இன்றும் அதே முறையில் பயணம் செய்ததும், இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று நனையவில்லை. குளிர்க் காற்று மட்டும் தான்.

புதன், அக்டோபர் 26, 2011

அணு மின் சக்தி இந்தியாவுக்குத் தேவையா? Does India Need Nuclear Electric Power?

தலைப்பில் உள்ள கேள்வியைப் பார்த்த உடனேயே பலர், "இதென்ன முட்டாள்தனமான கேள்வி. அணு மின் சக்தி இன்றி நாம் என்ன செய்ய முடியும்?" என்று கேட்பார்கள். ஆனால் சிலர், "அணு சக்திக்கு மாற்று வழிகள் உள்ளன. அணு சக்தியிலுள்ள அபாயங்களுக்காக அதைப் பயன்படுத்துவதை அறவே ஒழித்திட வேண்டும்" என்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? பலர் சொல்வதைக் கேட்க வேண்டுமா? அல்லது சிலர் சொல்வதைக் கேட்க வேண்டுமா?

மக்களாட்சி பலர் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்தே வேலை செய்கிறது. அல்லது, அப்படித்தான் தோன்றுகிறது. நாம் பலரின் கருத்தைக் கேட்க வேண்டுமா? அல்லது சிலரின் கருத்தைக் கேட்க வேண்டுமா? ம்ம்ம்... சரி பதிலையும் நானே சொல்கிறேன். அந்த சிலர் யார் என்பதை வைத்துதான் இருக்கிறது.

ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் கிரிக்கெட் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள், நீங்கள் விளையாடும் மைதானத்திற்கு சச்சின் டென்டுல்கரும், தோனியும் வருகிறார்கள். நீங்கள் பந்து வீசும் முறையைப் பார்த்துவிட்டு, சில மாற்றங்கள் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், உங்கள் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து, அது சரியாக வராது என்று சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில், யார் சொல்வதைக் கேட்பீர்கள்? பல ஆண்டுகள் உயிருக்குயிராக பழகிய நண்பர்கள் சொல்வதையா? அல்லது உங்களை யாரென்றேத் தெரியாத, டென்டுல்கரும் தோனியும் சொல்வதையா? முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அப்படியானால், பல ஆண்டுகள் அணு இயற்பியல் படித்து, பல ஆண்டுகள் அணு உலை வடிவமைப்பதில் பணியாற்றிய விஞ்ஞானிகள் சொல்வதைக் கேட்பதா? அல்லது கடந்த சில நாட்களாக, இது போன்று ஒரு சில கட்டுரைகளைப் படித்த ஆயிரக்கணக்கான மக்கள் சொல்வதைக் கேட்பதா?

நிலக்கரியிலிருந்து மின் உற்பத்தி செய்வதால் உருவாகும் புகையினால், புற்றுநோய் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டேயிருக்கும் சமயத்தில், கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சு தாக்கி ஒரு வேளை இறந்துவிடுவோமோ என்று எண்ணி பலர் எதிர்க்கின்றனர். கண் முன், கொஞ்ச கொஞ்சமாகக் கொல்லும் அனல் மின் நிலையங்களை ஏற்றுக்கொள்ளும் மக்கள், எந்த நிச்சயமுமின்றி ஒரு வேளை கொன்றுவிடுமோ என அணு மின் நிலையங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் என்ன?

நிச்சயமில்லாமல் ஒன்றுமில்லையே. உலகில் பல இடங்களில் அணு உலை விபத்துக்களால் மக்கள் இறந்திருக்கிறார்களே?

பல இடங்களில் விபத்துக்கள் நடக்கின்றனவா? உலகிலுள்ள பல அணுவுலைகளில், விரல் வைத்து எண்ணும்படியாக, சிலவற்றிலேயே விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றின் கதிர் வீச்சுக் கசிவால் ஏற்பட்ட இழப்பு, ஒவ்வொரு ஆண்டும் அனல் மின் நிலையங்களில் வெளியேறும் புகையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட மிகக் குறைவே.

அட இந்த விஷயம் தெரியாமல் போனதே. அப்படியானால் அணு மின்நிலையங்களுடன் சேர்த்து அனல் மின்நிலையங்களையும் மூட வேண்டும்.

அப்படிச் செய்தோமென்றால், எற்கனவே இருக்கும் காற்றாலைகள் மற்றும் நீர் மின் நிலையங்களில் வரும் உற்பத்தியை வைத்து, மழை பெய்யும்பொழுது, காற்று வீசும்பொழுது மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் ஆயிரக்கணக்கான தொற்சாலைகள் இயங்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பாதிக்க ஆரம்பிக்கும். பல கோடி மக்கள் வேலையிழப்பார்கள். மக்களுக்கு அரசாங்கத்தின் மேலுள்ள நம்பிக்கை போய்விடும். உள்நாட்டுப் போர் உருவாகும். அண்டை நாடுகள் இதுதான் சமயமென, நிலத்தை ஆக்கிரமிக்க ஆரம்பிப்பார்கள். அப்புறம் என்னங்க, நம்ம கதி அதோ கதி தான்.

மின் உற்பத்தி ஒரு நாட்டிற்கு இவ்வளவு அவசியமா? பின்னர் ஏன் கூடன்குளம் போன்ற இடங்களில் மக்கள் அணு மின் நிலையம் வர எதிர்க்கிறார்கள்?

என்னங்க விளையாட்டா கேள்வி கேட்கறீங்க. சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுன்னு வரிசையா தேர்தலா வருகிறதல்லவா. ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி பேசிப் பேசி மக்களுக்கு அலுத்து போயிருக்கும். புதிய புதிய முறைகளில் குட்டையைக் குழப்ப வேண்டாமா?

அட அரசியலெல்லாம் நமக்கெதுக்குங்க. அரசியல்வாதிகளும் மக்களில் ஒருவர்தானே. நாம் தேர்ந்தெடுப்பவர், நம்மைப்போல தானே இருப்பார்? ஒருவேளை அரசியலைச் சாக்கடையென்று ஒதுக்கி, ஓட்டுப் போடும் கடமையைத் தட்டிக் களிக்கும் நல்லவர்களெல்லாம், ஓட்டுப் போட ஆரம்பித்தால் நிலைமை மாறலாம்.

அது எப்படியோங்க, இன்றைய சூழ்நிலையில் நமக்கு அணு மின் சக்தி தேவைதான். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், என்று சொல்வது போல். அறியாமைதான் பயத்திற்கு காரணம். மக்களின் அறியாமையில், பயத்தைப் பயிரிட்டு, பணமாக அறுவடை செய்கிறார்கள் அரசியல்வாதிகள்.

ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார் என்று தெரிந்தும் கூட, அநுதினமும் வாகனங்களில் பயணிக்கதான் செய்கிறோம். எல்லா விஷயங்களிலும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அவற்றை நிறையிட்டு, நன்மை அதிகம் தருவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிற, தீமையே இல்லாததுதான் வேண்டுமென்று இருந்தால், அது மூடத்தனம். அப்படியிருந்தோமானால் காலங்காலமாகக் காத்திருக்க வேண்டியதுதான்.

~~ எனது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், கமென்ட்ஸில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகிள்+ போன்றவற்றில், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. ~~

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்

இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும்பொழுது, "தமிழர்களுக்கு வணக்கம்" எனப் பெயரிடலாமென நினைத்தேன். ஆனால் தமிழ் மண்ணில் பிறக்காமல், தமிழ் கற்றுக்கொண்டவர்களையும் வரவேற்க வேண்டுமென்ற எண்ணத்தில், "தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்" என்று மாற்றிவிட்டேன்.

எதற்காக இந்த பிளாகை உருவாக்கினேன்? ஊருல ஒரு கம்ப்யூட்டரும், இன்டெர்நெட்டும் இருந்தா போதும், அவனவன் பிளாகெழுத ஆரம்பிச்சிடுரான். அது என்னமோ உண்மைதாங்க. சிலருக்கு திடீரென்று ஒரு கருத்து தோன்றும். மன்னிக்கவும், பலருக்கு தோன்றும். ஆனால் சிலருக்கு அதை எங்காவது எழுதாவிட்டால் தலை வெடித்துவிடுவது போலிருக்கும்.

அந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் பிரபலமான எழுத்தாளராக இல்லாதவரை, அவர்கள் எழுதிய காகிதமோ அல்லது ஓலைச் சுவடியோ காலத்தில் கரைந்துவிடும். சில நேரம் வெள்ளத்திலும் கரைந்து போவதுண்டு. முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஆவணத்தை நகலெடுப்பதென்பது, காலத்தை காட்டுமிராண்டித்தனமாக காலியாக்கும் வேலை. ஆமாங்க, நகலெடுப்பதென்றால் மற்றொறு சுவடியை எடுத்து முதலிலிருந்து எழுத வேண்டியதுதான். பணக்கார எழுத்தாளராக இருந்தால், நகலெடுக்க வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளலாம். எழுத்தாளர், பணக்காரராகவும் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

அப்படின்னா என்னதாங்க பண்ணுவாங்க ஏழை எழுத்தாளர்கள்? பெரும்பாலும் எழுதி வைத்து அவர்களே மீண்டும் மீண்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதான். சிலருக்கு மன்னரின் பரிசு கிடைக்கலாம். வடிவேலு நடித்த 23ம் புலிக்கேசி படத்தில் வருவது போல, தண்டனையும் கிடைக்கலாம்.

மனிதனின் அறிவியல் முன்னேற்றங்களால், இந்த தடங்கல்களையெல்லாம் எழுத்தாளர்கள் தாண்டிவிட்டனர். நமது நாட்டில் பத்திரிக்கைச் சுதந்திரம் இருக்கிறதோ இல்லையோ, இப்பொழுதுக்கு பிளாகிங் சுதந்திரம் இருக்கிறது. இந்த சமயத்தை, நீடித்திருக்கும் வரை பயன்படுத்திக்கொள்வோமே என்றுதான் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதனால் எனக்கு திடீர் திடீரென தோன்றும் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சில விஷயங்கள்தான் பகிரப் பகிரப் பன்மடங்காகும். அவற்றுள் கருத்துக்களும் எண்ணங்களும் அடங்கும்.

~~ எனது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், கமென்ட்ஸில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகிள்+ போன்றவற்றில், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. ~~