சனி, அக்டோபர் 29, 2011

புகையிலும் குளிர் காயலாம்?

பொதுவாக புகையென்றாலே ஒவ்வாது எனக்கு. சாலையில் சில சமயம் கொசு மருந்து அடிப்பது போல சில ஆட்டோக்கள் முன்னால் சென்றால், சாதகமான சூழ்நிலையிருப்பின் முந்திச் சென்றுவிடுவேன்; இல்லையெனில் பிரேக் போட்டு, புகை, காற்றில் கரைந்து வலுவிழக்குமளவு பின்தங்கிச் செல்வேன். இது கனரக வாகனங்களின் பின் செல்லும்பொழுதும் பொருந்தும்.

ஆனால் வேண்டுமென்றெ ஒரு முறை, புகை போக்கியின் அருகிலேயே பைக்கை ஓட்டிச் சென்றுள்ளேன். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போலவே நல்ல மழைக் காலம். இரவு 10 மணியளவில் சென்னை மெப்ஸிலுள்ள எனது அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். புறப்படும் சமயம் சிறிது தூரலாக இருந்தது. ஏற்கனவே நேரமாகிவிட்ட நிலையில் தூரல்தானே என்று கிளம்பிவிட்டேன். அலுவலக வளாகத்தைக் கடந்து சற்று தூரம் வந்த பிறகுதான் தெரிந்தது, அது சிறிய தூரலல்ல, லேசான மழையென்று.

ஒதுங்குவதா? செல்வதா? ஒதுங்க வேண்டுமானால் அடுத்து எங்கே வழியிருக்கிறதென்று சிந்தித்து முடிப்பதற்குள், சட்டை உடலோடு ஒட்டுமளவுக்கு நனைந்திருந்தேன். முழுக்க நனைந்த பின் முக்காடெதற்கு என்பது போல, ஒதுங்கி மழை நிற்கும் வரை காத்திருக்கும் எண்ணத்தை அடியோடு அழித்துவிட்டேன். அதுவும் ஓங்கிப் பெய்து ஓயும் மழையல்ல, அடை மழை. அன்று காலையிலிருந்தே அப்படித்தான் பெய்து கொண்டிருந்தது.

மெப்ஸ் வளாகத்தைக் கடந்து, ஆறு வழிச் சாலையையடைந்து, 50 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டும் போது, குளிர்ந்த காற்றும் சொட்டச் சொட்ட நனைந்த உடையும், தாடைத் தசைகளை இயக்கி, பற்களை அந்நிச்சையாகவே தந்தியடிக்க வைத்தன. அதனால் வேகத்தைக் குறைத்து 40 கிலோமீட்டரிலேயே செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் குளிர் தாங்கக் கடினமாகத்தானிருந்தது. அந்த சமயம் தான் என் சேவகனாக வந்தது MTC பேருந்து (சென்னை மாநகரப் பேருந்து).

அப்பொழுதுதான் T.B. மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று கிளம்பிய பேருந்தை, அதன் வலப்பறமாக முந்திச் செல்ல முயற்சித்தேன். பேருந்து போன்ற கனரக வாகனங்களில் வலதுபுறம், பின் சக்கரத்திற்கு சற்று முன்புதான் புகை போக்கியிருக்கும். சரியாக அந்த இடத்தைக் கடக்கும்பொழுது, ஏதோ சுகமாக இருப்பதாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் புகையிலிருக்கும் எந்திரத்தின் வெப்பம், குளிருக்கு இதமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன்.

அதற்கு பிற்பாடு பைக்கின் வேகத்தை பண்படுத்தி, பேருந்தின் வேகத்தோடு ஒத்திருக்குமாறு புகை போக்கியின் பக்கத்திலேயே பயணம் செய்தேன். பேருந்து ஏதாவது நிறுத்தத்தில் நின்றால், சற்று முன்பாகச் சென்று, மற்றொரு பேருந்தையோ, லாரியையோ ஒட்டிக் கொண்டேன். இவ்வாறு அன்றைய பயணம் இனிதே முடிந்தது.

இன்றும் அதே முறையில் பயணம் செய்ததும், இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று நனையவில்லை. குளிர்க் காற்று மட்டும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக